science-deep-dives

VV-037T - வினாவும் விடையும் (பகுதி - 2)

ரவிசங்கர் கருப்பையா
August 15, 2026

வினாவும் விடையும் - பகுதி - 2

VV-037T - வினாவும் விடையும் (பகுதி - 2)

எங்கள் வாட்ஸ்அப் குழுவில் இணைய (Join our WhatsApp group) - https://chat.whatsapp.com/DtRfcPrnZykIfmavZU6kj0

மீளுருவாக்க விவசாயத்தை பற்றி நான் எழுதிய கட்டுரைகளை படித்து விட்டு விவசாய ஆர்வலர்கள் கேட்ட கேள்விகளின் இரண்டாம் பகுதி இது.

இதன் முதல் பகுதியை படிக்க -> https://www.newviva.in/blog/question-answers-part-1-tamil

1. வளிமண்டல கார்பன் உயர்விற்கு தொழிற்சாலைகளும் நகர்மயமாக்கலுமே முதன்மைக் காரணம் எனும் போது, அதற்கான பழியைப் பாரம்பரிய விவசாயத்தின் மீது போட்டுவிட்டு, விவசாய முறையை மட்டும் மாற்றுவது காலநிலை மாற்றத்திற்கு முழுமையான தீர்வாகுமா?

இந்த கேள்வி ஒரு தவறான புரிதலைக் காட்டுகிறது. மீளுருவாக்க விவசாயம் யார்மீதும் பழிபோடவில்லை. அது விவசாயிகளுக்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறது.

தொழிற்சாலைகளும் நகரமயமாக்கலும் காலநிலை மாற்றத்திற்கு முக்கிய காரணம் என்பது உண்மை. ஆனால் விவசாயமும் அதற்கு பங்களிக்கிறது — உழவு, ரசாயன உரங்கள், ஒற்றைப் பயிர்ச்செய்கை ஆகியவை மண்ணில் இருந்து கார்பனை வெளியேற்றுகின்றன. இதை மறுப்பதில் பயனில்லை.

மீளுருவாக்க விவசாயம் காலநிலை மாற்றத்திற்கு முழுமையான தீர்வு என்று யாரும் சொல்லவில்லை. ஆனால் இது ஒரு விவசாயி காலநிலை மாற்றத்திற்கு எப்படி தன்னை தயார் செய்து கொள்ள வேண்டும் என்று விளக்குகிறது.

ஒரு உதாரணம் மூலம் இதைப் புரிந்து கொள்வோம். கால நிலை மாற்றத்தினால் வெப்பம் அதிகரிக்கும் என்பது எல்லோரும் அறிந்ததே. இதனால் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தொல்லைகள் அதிகமாகும். இன்று இயற்கை விவசாயத்தில் இதற்கு வேப்ப எண்ணெய் கரைசல் அல்லது ஐந்திலை கரைசல் என்று அதை விரட்டத் தான் பார்க்குமே தவிர அந்த பிரச்சனையை சரி செய்யாது. மீளுருவாக்க விவசாயம் அந்த பிரச்சனையை சரி செய்யும். அந்தப் பிரச்சனைக்கான காரணம் - இலையின் வெப்பம் அதிகரிக்கும் போது இலைகளில் புரதம் குறைந்து அம்மோனியா அதிகமாகும். இது சிறிய பூச்சிகளுக்கு உணவு. அதை சாப்பிடத் தான் அவை அங்கு வரும். இலைகளில் உள்ள அம்மோனியாவை நீங்கள் மீண்டும் புரதம் ஆக்கினால் அந்த பூச்சிகள் தானாக ஓடி விடும். இதற்கு என்ன ஊட்டச்சத்து தேவை என்பதற்க்கு அறிவியல் இருக்கிறது. இதைக் கொடுத்தாலே போதும். விஷ பூச்சி மருந்தோ, வேப்ப எண்ணையோ தேவையில்லை. இது தான் மீளுருவாக்க விவசாயம்.


2. அறிவியல் பூர்வமான நவீன அணுகுமுறை என்ற பெயரில் சிறிய அளவில் ரசாயனங்கள் அல்லது மரபணு மாற்றப்பட்ட (GM) தொழில்நுட்பங்கள் அனுமதிக்கப்பட்டால், அது 'நஞ்சற்ற உணவு' என்ற இயற்கை விவசாயத்தின் அடிப்படை லட்சியத்தையே சிதைத்துவிடாதா?

இந்த கேள்வி ஒரு தவறான கற்பிதத்தை அடிப்படையாகக் கொண்டது. மீளுருவாக்க விவசாயம் நஞ்சுள்ள ரசாயனங்களையோ அல்லது மரபணு மாற்றப்பட்ட (GM) தொழில்நுட்பத்தையோ பரிந்துரைக்கவில்லை. அது முற்றிலும் மாறுபட்டது.

இது 'நஞ்சற்ற உணவு' என்ற லட்சியத்தை அழிக்கவில்லை; அதைத்தான் நிறைவேற்றுகிறது.

இயற்கை விவசாயத்திற்கும் மீளுருவாக்க விவசாயத்திற்கும் உள்ள வித்தியாசம்: இயற்கை விவசாயம் 'என்ன செய்யக் கூடாது' என்று சொல்கிறது. மீளுருவாக்க விவசாயம் 'என்ன செய்ய வேண்டும்' என்று அறிவியல் பூர்வமாக விளக்குகிறது.


3. இயற்கை விவசாயத்தில் "அதிக உழைப்பு மற்றும் மெனக்கெடல் தேவைப்படுகிறது" என்பதை ஒரு குறையாகப் பார்ப்பதை விட, அது கிராமப்புற வேலைவாய்ப்பையும் குடும்பத் தற்சார்பையும் ஊக்குவிக்கும் காரணியாகத்தானே பார்க்கப்பட வேண்டும்?

உழைப்பு என்பது மதிப்பு வாய்ந்தது. அதை மறுக்கவில்லை. ஆனால் ஒரு விவசாய முறை வெற்றி பெற வேண்டுமானால், அது பொருளாதார ரீதியில் நிலைத்து நிற்க வேண்டும்.

இன்று இயற்கை விவசாத்தில் அதிக உழைப்பு இருக்கிறது, ஆனால் போதிய வருமானம் இல்லை. அதனால் தான் விவசாயிகள் கைவிடுகிறார்கள். இதைச் சொல்வது 'உழைப்பை அவமதிப்பது' அல்ல; இது உண்மையை சொல்வது.

மீளுருவாக்க விவசாயம் அதிக உழைப்பைக் குறைக்க விரும்புகிறது — அறிவியல் மூலம். உதாரணம்: மண் பரிசோதனையில் சரியான அளவு கால்ஷியம், மெக்னீஷியம், பொட்டாஷியம் மற்றும் சோடியம் அளவுகளை மண் சமநிலை (Soil Balance) என்ற மீளுருவாக்க அறிவியலுக்கு ஏற்ற விகிதத்தில் வைத்திருந்தால் களைப் பிரச்சனை வெகுவாக குறையும். இது களை மேலாண்மையில் விவசாயியின் வேலையை குறைக்கும்.

தற்சார்பு என்பது மெனக்கெடலில் இல்லை; புத்திசாலித்தனத்தில் உள்ளது. மீளுருவாக்க விவசாயம் அந்த புத்திசாலித்தனத்தை தருகிறது.


4. மீளுருவாக்க விவசாயம் (Regenerative Agriculture) என்ற கருத்தாக்கம் உலகளவில் இன்னும் முழுமையான வரையறைக்கு வரவில்லை. இந்நிலையில், தெளிவாக வரையறுக்கப்பட்ட பாரம்பரிய இயற்கை விவசாயத்தை விட்டுவிட்டு தெளிவற்ற ஒரு புதிய முறைக்குமாறுவது ஆபத்தானது இல்லையா?

மீளுருவாக்க விவசாயம் என்பது ஒரு தெளிவற்ற முறை என்பது மிகத் தவறான புரிதல். மீளுருவாக்க விவசாயத்திற்கு உலகளவில் தெளிவான வரையறை இருக்கிறது. அதன் அடிப்படைக் கொள்கைகள்:

  1. மண்ணைத் தொந்தரவு செய்யாதே (குறைந்த/உழவு இல்லா)
  2. மண்ணை மூடியே வைத்திரு (பயிர்க்கழிவு / மூடு பயிர்கள்)
  3. வேர்களை உயிருடன் வைத்திரு (தொடர் பயிர்ச்செய்கை)
  4. பல வகைப் பயிர்களை வளர் (பல்லுயிர் வளர்ப்பு)
  5. கால்நடைகளை ஒருங்கிணை (மேய்ச்சல் மேலாண்மை)

இவை உலகெங்கிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கைகள். இவை தெளிவற்றவை அல்ல.

பாரம்பரிய இயற்கை விவசாயம் "இதைச் செய்யாதே" என்று சொல்கிறது. மீளுருவாக்க விவசாயம் "இதைச் செய், ஏன் செய்கிறாய், எப்படி செய்கிறாய்" என்று தெளிவாக விளக்குகிறது. இதில் ஆபத்து இல்லை — தெளிவு உள்ளது. இதில் காணப்படும் கொள்கைகளை நம்மால் உடனே நிறைவேற்ற முடியவில்லை என்றாலும் அதற்கான மாற்று அணுகுமுறைகளையும் இது தெளிவாக வழங்குகிறது.

நாட்டுச் சர்க்கரை இல்லை என்றால் பெரும்பாலான இயற்கை விவசாய இடுபொருட்களை செய்ய முடியாது. அதோடு, மாட்டை மேய விட்டு மண்ணை வளர்த்தது தான் பாரம்பரிய இயற்கை விவசாயம். மாட்டுச் சாணத்தை பேரலில் (Barrel) கலக்கி செய்யப்படும் விவசாயத்துக்கும் நமது பாரம்பரியத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. அதனால் தான் மீளுருவாக்க விவசாயம் ஒரு அவசர தேவையாக இருக்கிறது.


5. பல்லாயிரம் ஆண்டுகளாக எந்த ரசாயனமும் நவீன தொழில்நுட்பமும் இன்றி உலக மக்கள் தொகைக்குப் சோறளித்த பாரம்பரிய விவசாய முறையை, கடந்த 100 ஆண்டுகளில் உருவான காலநிலை மாற்றப் பிரச்சினைகளுக்காக "சாத்தியமற்றது" என்று முடிவுகட்டுவது அவசரப்பட்டு எடுக்கப்படும் முடிவா இல்லையா?

இந்தக் கேள்விதான் மிக முக்கியமானது. ஒரு விவசாயிக்கு மகசூல்தான் முதல் கேள்வி.

உண்மை என்னவென்றால் கி.பி. 1800-ல் உலக மக்கள் தொகை 100 கோடி. இன்று 830 கோடி. பாரம்பரிய விவசாயம் அன்று போதுமானதாக இருந்தது. இன்று அது போதாது. இதை மறுக்க முடியாது.

ரசாயன விவசாயம் மகசூலை அதிகரித்தது — ஆனால் மண்ணைக் கொன்றது, நீரை மாசுபடுத்தியது, உடலை நோயுறச் செய்தது.

மீளுருவாக்க விவசாயம் இந்த இரண்டிற்கும் இடையிலான பாதை:

  1. மகசூல் குறையாது (அறிவியல் மூலம்)
  2. மண் வளமாகும் (ஆரோக்கியமான பயிர் மூலம்)
  3. இடுபொருள் செலவு படிப்படியாக குறையும்

பாரம்பரிய விவசாயத்தைக் கைவிடவில்லை. அதன் உண்மையான அறிவை எடுத்து, இன்றைய தேவைக்கு ஏற்ற அறிவியலுடன் இணைக்கிறோம். இது அவசர முடிவல்ல; இது காலத்தின் கட்டாயம்.

Share this article

Help others discover this content

Share on social media:

Article URL:

https://newviva.in/blog/question-answers-part-2-tamil

More from science-deep-dives