science-deep-dives

VV-034T - வினாவும் விடையும் (பகுதி - 1)

ரவிசங்கர் கருப்பையா
August 4, 2026

வினாவும் விடையும் (பகுதி 1)

VV-034T - வினாவும் விடையும் (பகுதி - 1)

VV-034T - வினாவும் விடையும் (பகுதி - 1)

எங்கள் வாட்ஸ்அப் குழுவில் இணைய (Join our WhatsApp group) - https://chat.whatsapp.com/DtRfcPrnZykIfmavZU6kj0

என்னைப் பொறுத்தவரை இந்தக் கேள்விகள் மிக முக்கியமானவை. மீளுருவாக்க விவசாயம் என்பது இயற்கை விவசாய கொள்கைகளை தூக்கி எறிவது கிடையாது. மாறாக, இயற்கை விவசாயம் என்ன செய்ய நினைக்கிறதோ அதை வேகமாகவும், விவசாயியின் பொருளாதார நலனுக்கு பங்கம் விளைவிக்காமல் நடைமுறைபடுத்தும் ஒரு அறிவியல் சார்ந்த விவசாய முறை.

எந்த ஒரு விஷயத்தையும் புதிதாக கற்றுக் கொள்ளும் போது நமக்கு வரும் கேள்விகள் தான் இவை. இது போன்ற கேள்விகள் தான் நம் முயற்சியை செம்மை படுத்த உதவும். எனக்கு வந்த கேள்வியும் அதற்கான பதிலின் முதல் தொகுப்பு இது.

1. நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பெயரால் கொண்டுவரப்படும் புதிய முறைகள், ரசாயன விவசாயம் ஏற்படுத்திய அதே போன்ற பக்கவிளைவுகளையும் சுற்றுச்சூழல் சீர்கேட்டையும் மீண்டும் உருவாக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்?

ஒரு மாற்றம் வரும் பொழுது அதனை பற்றிய பயம் உண்மை. உத்தரவாதம் என்பது ஒரு நபரோ அல்லது ஒரு நிறுவனமோ தருவது அல்ல. அது உண்மையில் இருந்து மட்டும் தான் வரும்.

ரசாயன விவசாயம் உங்களிடம் எதையும் மறைக்கவில்லை. அது ஒரு கொடிய விஷம் என்று அது வரும் பாட்டிலிலேயே எழுதி இருக்கிறது. பெரும்பாலான விவசாயிகள் அதை உபயோகிக்கிப்பதற்க்கு காரணம் அவர்களுக்கு வேறு வழி தெரியவில்லை. ஒரு விஷத்தை கொஞ்சம் கொஞ்சமாக மண்ணில் போட்டால் அந்த மண் விஷமாகும் என்பது மறுப்பதற்க்கு இல்லை.

ஆனால் இயற்கை விவசாயம் உண்மையை தெரிந்து கொள்ள மறுக்கிறது என்பது தான் உண்மை. பரிசோதித்தால் தான் உண்மை தெரியும் என்பதால் அது பெரும்பாலும் எதையும் பரிசோதிப்பதே இல்லை. இன்று கடை பிடிக்கப்படும் இயற்கை விவசாய நடைமுறைகளில் பக்க விளைவுகளும், சுற்றுச் சூழல் சீர்கேடும் இல்லை என்று சொல்லி விட முடியாது. இன்று பயன்படுத்த படும் பஞ்சகவ்யா, அமுத கரைசல், மண்புழு சாண உரம் இவைகளில் கன உலோகங்கள் இருப்பதற்க்கான நிறைய வாய்ப்புகள் உள்ளன. ஆனால் மாட்டு சாணம் என்றாலே நல்லது என்று ஒரு நம்பிக்கையை மட்டும் வளர்த்து விட்டோம். இது தான் மிகவும் அபாயகரமானது.

மீளுருவாக்க விவசாயம் என்பது நம்பிக்கையோ அல்லது ரசாயன நிறுவனங்கள் நடத்தும் ஒரு மறைமுக விவசாய முறையோ கிடையாது. 1960-களில் முன்னோடி மண்ணியல் விஞ்ஞானி வில்லியம் அல்பிரைக்ட் (William Albrecht) மூலம் உயிர் பெற்ற ஒரு விவசாய முறை. ஆனால் ரசாயன நிறுவனங்களின் வணிக நலன்களால் ஒடுக்கப்பட்டது. இன்று தொழில்நுட்பம் வளர்ந்ததனால் இது எல்லோருக்கும் கிடைக்கும் வகையில் உள்ளது. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள ஐநா சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) மீளுருவாக்க விவசாயத்தைத் தான் ஒரு முக்கிய தீர்வாக பரிந்துரைக்கிறது.


2. மாடுகளுக்கு சூப்பர் நேப்பியர் புல் மற்றும் மூட்டைத் தீவனங்கள் கொடுப்பது இயற்கை விவசாயத்தின் பிழை அல்ல, அது வளர்ப்பு முறையின் பிழை. அப்படி இருக்கும்போது, கால்நடை வளர்ப்பைச் சரிசெய்வதை விட்டுவிட்டு, பாரம்பரிய இயற்கை விவசாய முறையையே பழமைவாதம் என்று நிராகரிப்பது சரியா?

மீளுருவாக்க விவசாய முறை தான் உண்மையான பாரம்பரிய இயற்கை விவசாய முறையை பரிந்துரைக்கிறது. இந்த விவசாய முறையில் "கால்நடை ஒருங்கிணைப்பு" என்று ஒரு கொள்கை உள்ளது. ஒரு நிலம் வளமாக வேண்டும் என்றால் அந்த நிலத்தில் பல தானியப் பயிர் வளர்ந்து அதை கால்நடைகள் மேய வேண்டும். இதிலும் ஒரு ஆழமான அறிவியல் உள்ளது. "மாடு நுனிப்புல் மட்டுமே மேயும்" என்று ஒரு பழமொழி உண்டு. காரணம் மாடு ஒரு செடியை கடிக்கும் போது, அந்தச் செடி தன் இயற்கையான தற்காப்பு திறனை உடனே அதிகரிக்கும். இது அந்தச் செடியின் வேர் பகுதியில் அதிகப் படியான அமில கசிவுகளை உருவாக்கும். அது அந்தச் செடியை கசப்பாக்கும். மாடு அந்தச் செடியை மறுபடியும் கடிக்காது. இதில் இருந்து தான் அந்தப் பழமொழி வந்தது. மாடு கடிக்கும் போது வெளியாகும் அந்த அமில கசிவுகள் தான் மண்ணில் உள்ள நுண்ணுயிர்களை மிக வேகமாக வளர்த்தெடுக்கும். இது தான் உண்மையான பாரம்பரிய விவசாய அறிவியல். இதை தெளிவாக எடுத்துச் செல்வது மீளுருவாக்க விவசாய முறை மட்டுமே.

சூப்பர் நேப்பியர் மற்றும் அது போன்று ஒற்றை புல் தாவரங்களையும், மூட்டைத் தீவனங்ககளையும் கொடுத்து மாடு வளர்ப்பது பிழை என்பதை இயற்கை விவசாய வல்லுனர்கள் விவசாயிகளிடம் கொண்டு சேர்த்தால் நல்லது. அப்படி வரும் சாணம் இயற்கை விவசாயத்திற்கு சரியல்ல என்பதையும் அவர்கள் விவசாயிகளுக்கு தெளிவு படுத்த வேண்டும்.


3. நவீன மீளுருவாக்க விவசாயம் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்படும் அறிவியல் கருவிகள், விதைகள் மற்றும் தொழில்நுட்பங்கள் மீண்டும் விவசாயிகளைப் பெருநிறுவனங்களை (Corporate companies) சார்ந்திருக்கும் நிலைக்குத் தள்ளாதா?

இந்த கேள்வி மிகவும் முக்கியமானது. ஏனென்றால், ரசாயன உரங்களும், பூச்சிக்கொல்லிகளும் நிறுவனங்களிடமிருந்து தான் வாங்க வேண்டும். இயற்கை விவசாத்தில் கூட, "மீன் அமிலம்", "பஞ்சகவ்யா", "அஸோஸ்பைரில்லம்" போன்றவற்றை வாங்கவோ அல்லது அதற்கான பயிற்சிக்காகவோ பல நிறுவனங்கள் வந்துவிட்டன. விவசாயி ஒரு ரசாயன கடைக்காரரிடமிருந்து இன்னொரு அங்ககக் கடைக்காரருக்கு மாறிக்கொண்டிருக்கிறார்.

மீளுருவாக்க விவசாயம் இந்த பொறியில் இருந்து விடுபட வைக்கும். ஏன்? இது அறிவியல் நுணுக்கங்கள் கொண்ட தற்சார்பு விவசாய முறை. ஒரு உதாரணம் தருகிறேன். "குறைந்த உழவு" என்று மீளருவாக்க விவசாயத்தில் ஒரு கொள்கை உள்ளது. நீங்கள் ரோட்டவேடர் போட்டாலோ, சட்டிக் கலப்பை போட்டாலோ அல்லது ஐந்து கலப்பை போட்டாலோ உங்கள் நிலத்தில் உள்ள பெரும்பான்மையான நல்ல பூஞ்சாணங்கள் இறந்து போகும். உங்கள் பயிருக்கு தேவையான ஊட்டச்சத்துகளை கொடுப்பதற்க்கு இந்த பூஞ்சாணங்கள் மிகவும் அவசியம். உங்கள் மண்ணில் அதிக களை முளைப்பதற்க்கும், உங்கள் பயிருக்கு அதிக பூச்சி தாக்குதல் மற்றும் நோய் தாக்குதல் வருவதற்க்கும் இது மிகப் பெரும் காரணம். இந்த "குறைந்த உழவு" கொள்கையில் "உளி கலப்பை"யை ஒரு குறிப்பட்ட இடைவெளியில் விவசாயிகள் பயன்படுத்த வழியுறுத்துகிறது. இது உங்கள் மண்ணுக்கு தேவையான காற்றோட்டதையும் வழங்கும். அதே சமயத்தில் உங்கள் பூஞ்சாண வலை பின்னல்களை முழமையாக தகர்க்காது. அதே போல "24 x 7 உயிருள்ள வேர்" என்ற கொள்கையும் உள்ளது. மரங்களுக்கு இடையே குறுகிய காலப் பயிர்களை வளர்ப்பது — இதற்கு ஆங்கிலத்தில் Syntropic Agroforestry / Regenerative Agroforestry என்று பெயர்.

இவை அனைத்துமே ஒரு தற்சார்பை நோக்கி விவசாயியை அழைத்துச் செல்லும் அணுகுமுறைகள். இதில் ஒரு நிறுவனத்தின் பொருளை சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.


4. பல தலைமுறைகளாக மண் வளத்தைக் காப்பாற்றி, நஞ்சற்ற உணவை வழங்கிய பாரம்பரிய இயற்கை விவசாய முறைகளை, காலநிலை மாற்றத்தைக் காரணம் காட்டி முழுமையாகக் கைவிடுவது மண்ணின் சுய மீட்புத் திறனைக் குறைத்துவிடாதா?

இந்த கேள்வியில் ஒரு உண்மை இருக்கிறது — பாரம்பரிய விவசாயம் நமது மண்ணை பல தலைமுறைகளாக காப்பாற்றியது என்பதை மறுப்பவர் யாரும் இல்லை.

நாம் பாரம்பரியத்தை கைவிடவில்லை; பாரம்பரியம் ஏன் வேலை செய்தது என்ற அறிவை இழந்துவிட்டோம். மீளுருவாக்க விவசாயம் அந்த அறிவை மீட்டுத்தருகிறது. மேலே சொன்ன - "மாட்டை பல தானியம் வளர்த்து அதில் மேய விடுவது" மற்றும் "உளி கலப்பை மட்டும் பயன்படுத்துவது" போன்ற அணுகுமுறைகள் பாரம்பரிய விவசாய முறைகளில் இருந்து வந்தது தான். அதனை அறிவியல் பூர்வமாக புரிந்து கொள்ளும் போது நமக்கு இன்றைய இயற்கை விவசாய செயல்முறைகளில் உள்ள தவறுகள் புலப்படும்.

மீளுருவாக்க விவசாயம் மண்ணின் சுய மீட்புத் திறனை குறைக்கவில்லை; அதைத்தான் வேகப்படுத்துகிறது. பாரம்பரியத்தில் இருந்த அறிவை, இன்றைய அறிவியலுடன் இணைத்து மண்ணை மீட்பதே இதன் உண்மையான நோக்கம்.


5. இந்தியாவில் 80% க்கும் அதிகமானோர் சிறு மற்றும் குறு விவசாயிகள். நவீன அறிவியல் சார்ந்த மீளுருவாக்க விவசாயத்திற்கான உள்கட்டமைப்பு மற்றும் செலவினங்களை இந்த எளிய விவசாயிகளால் உடனடியாகத் தாங்க முடியுமா?

90 சதவீதத்திற்கும் அதிகமான விவசாயிகள் இன்று இயற்கை விவசாயம் செய்ய தயங்குவதற்க்கான காரணம் - அவர்களுக்கு அதில் ஏற்படும் வாழ்வாதார பிரச்சனை தான். இத்தனை வருடங்களில் எத்தனையோ கூட்டங்கள், எத்தனையோ விளக்கங்கள், எத்தனையோ செயல்முறைகள். அவ்வளவு இருந்தும் இன்று உண்மையாக இயற்கை விவசாயம் செய்யும் நபர்கள் மிகக் குறைவே. காரணம் இன்றைய இயற்கை விவசாய முறைகளில் தெளிவான, அறிவியல் பூர்வமான தீர்வு இல்லை.

உண்மை என்னவென்றால் மீளுருவாக்க விவசாயம் தான் சிறு மற்றும் குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் அதே சமயம் அவர்கள் செய்யும் விவசாயத்தில் மண் வளம், மனித வளம் மற்றும் சூழலின் வளம் என அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு தீர்க்கமான அணுகுமுறையையும் வழங்குகிறது.

எடுத்துக்காட்டு - களை பிரச்சனை. இன்று வரை இயற்கை விவசாயத்தில் இதற்க்கான சரியான பதில் இல்லை. மீளுருவாக்க விவசாய முறையில் ஒரு சரியான மண் பரிசோதனை மூலம் (CEC, Base Saturation %) இதற்கு படிப்படியாக ஒரு தெளிவான தீர்வை கொண்டு வரலாம். மண்ணில் கால்சியம் குறைவு, பொட்டாஷியம் அதிகம் இருந்தால் களைகள் வேகமாக வளரும். மண் பரிசோதனை இந்த ஏற்றத்தாழ்வைக் காட்டும். அதை சரி செய்தால் களைகள் தானாகக் குறையும். இதன் மூலம் உங்கள் மண்ணின் பொலபொலப்பு தன்மையும் அதிகரிக்கும். இதில் அறிவியல் இருப்பதனால் விவசாயத்திற்கு புதிதாக வருபவர்கள் இதனை வேகமாக எடுத்துச் செல்வார்கள். அதனால் தான் இதை விவசாயத்தின் எதிர்காலம் என்று சொல்கிறேன் - ஏனென்றால் இது நம்பிக்கையல்ல, அறிவியல்.

Share this article

Help others discover this content

Share on social media:

Article URL:

https://newviva.in/blog/question-answers-part-1-tamil

More from science-deep-dives