science-deep-dives

VV-033T: எருக்கு இலை செடிகளுக்கு போரான் (Boron) சத்தை உண்மையிலேயே தருகிறதா? இயற்கை விவசாயக் கூற்றின் பின்னணியில் உள்ள அறிவியல் உண்மை

ரவிசங்கர் கருப்பையா
July 31, 2026

எருக்கு இலையில் போரான் இருக்கிறதா?

VV-033T: எருக்கு இலை செடிகளுக்கு போரான் (Boron) சத்தை உண்மையிலேயே தருகிறதா? இயற்கை விவசாயக் கூற்றின் பின்னணியில் உள்ள அறிவியல் உண்மை

VV-033T: எருக்கு இலை செடிகளுக்கு போரான் (Boron) சத்தை உண்மையிலேயே தருகிறதா? இயற்கை விவசாயக் கூற்றின் பின்னணியில் உள்ள அறிவியல் உண்மை!

தமிழ்நாட்டின் இயற்கை விவசாய வட்டாரங்களில் நீங்கள் பயணித்திருந்தால், இந்த ஒரு விஷயத்தைக் கண்டிப்ராகக் கேட்டிருப்பீர்கள்: "எருக்கு (Calotropis gigantea) இலையில் போரான் சத்து மிக அதிகமாக உள்ளது. அதை மூடாக்காகவோ, தழை உரமாவோ அல்லது கரைசலாகவோ பயன்படுத்தினால் பயிர்களில் உள்ள போரான் சத்துக் குறைபாட்டை முற்றிலும் சரிசெய்துவிடலாம்."

விவசாயக் கருத்தரங்கிலும், சோஷியல் மீடியாவிலும் இந்த கருத்து மிகவும் நம்பிக்கையுடன் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டு வருகிறது.

மீளுருவாக்க விவசாயத்தில் (Regenerative Agriculture) நமது முக்கிய நோக்கமே, பாரம்பரிய விவசாய அறிவை முறையான தாவர அறிவியலோடு ஒப்பீடு செய்து பார்ப்பதுதான். அந்த வகையில், "எருக்கில் போரான் இருக்கிறதா?" என்ற கேள்வியோடு இதன் பின்னணியில் உள்ள அறிவியல் ஆராய்ச்சிகளை நான் தேடத் தொடங்கியபோது, நாம் விவாதிக்க வேண்டிய ஒரு முக்கியமான இடைவெளி வெளிப்பட்டது.


ஆராய்ச்சி முடிவுகள் உண்மையில் சொல்வது என்ன?

எருக்கு இலையில் என்னென்ன தாதுக்கள் மற்றும் ரசாயனக் கூறுகள் உள்ளன என்பதை X-ray Fluorescence (XRF), Atomic Absorption Spectrometry (AAS) போன்ற நவீன தொழில்நுட்பங்கள் மூலம் பல சர்வதேச மற்றும் இந்திய ஆராய்ச்சித் தாள்கள் பகுப்பாய்வு செய்துள்ளன.

இந்த அனைத்து ஆராய்ச்சிகளிலும் ஒரு குறிப்பிட்ட தாதுக்களின் அமைப்பு மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியாக வெளிப்படுகிறது:

  • பொட்டாசியம் (K), கால்சியம் (Ca), மற்றும் குளோரின் (Cl) ஆகியவை தான் எருக்கு இலையின் உலர்ந்த எடையில் சுமார் 20% வரை ஆக்கிரமித்துள்ளன.
  • மெக்னீசியம் (Mg), இரும்பு (Fe), மற்றும் துத்தநாகம் (Zn) ஆகிய சத்துக்கள் குறைந்த அளவில் உள்ளன.
  • போரான் (B) எந்தவொரு தாது பகுப்பாய்விலும் இடம்பெறவே இல்லை! அது அதிகமாக இருக்கிறதா அல்லது இல்லையா என்பது பற்றிய தரவுகளே இல்லை. சுருக்கமாகச் சொன்னால், எருக்கு இலையில் போரான் சத்து எவ்வளவு இருக்கிறது என்று இதுவரை யாருமே இலக்கு வைத்துப் பரிசோதிக்கவே இல்லை (Not Tested).

எருக்கு தொடர்பான பெரும்பாலான ஆராய்ச்சிகள் அதன் மருத்துவக் குணங்கள், அதில் உள்ள பூச்சிக்கொல்லி வேதிப்பொருட்கள் (Flavonoids, Cardenolides) பற்றித்தானே தவிர, விவசாயக் கோணத்தில் போரான் சத்தை அளவிடும் பிரத்யேக ஆய்வு இதுவரை வெளியாகவில்லை.

இங்கே இன்னொன்றையும் சொல்கிறேன். எருக்கு இலையில் போரான் இருக்கிறதா என்ற இந்தக் கேள்வியை நமது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் - இயற்கை விவசாய ஆராய்ச்சி நிலையக் குழுவிலும் கேட்டேன். அவர்களின் பதில் - "இது ஒரு பாரம்பரிய அறிவு" என்பதே. இதைத் தாண்டி அவர்களிடம் வேறு எந்த தரவுகளும் இல்லை.


அப்படியானால், இந்தக் கூற்று தவறா?

இது தவறான கூற்று என்று சொல்ல முடியாது—ஆனால் "நிரூபிக்கப்படாத கூற்று" (Unverified Claim) என்றுதான் சொல்ல வேண்டும்.

"ஒரு விஷயம் பரிசோதிக்கப்பட்டு பொய் என நிரூபிக்கப்படுவது" வேறு; "அது இதுவரை பரிசோதிக்கப்படவே இல்லை" என்பது வேறு! எருக்கில் போரான் சத்து இருக்கிறது என்ற பேச்சு இரண்டாவது வகையைச் சேர்ந்தது.

தாவர அறிவியலின்படி இந்த நம்பிக்கை ஏன் உருவானது என்று நாம் புரிந்துகொள்ள வேண்டும்:

  1. எல்லா தாவரங்களிலும் சிறிதளவு போரான் உண்டு: போரான் என்பது தாவரச் செல் சுவர்களைக் கட்டுவதற்குத் தேவையான ஒரு அடிப்படை நுண் ஊட்டச்சத்து. பூமியில் உள்ள அனைத்துப் பச்சை இலைகளிலும் சிறிதளவு போரான் இருக்கும். எனவே, எருக்கு இலையிலும் போரான் இருக்கும்—அதே அளவு போரான் ஒரு மாமரத்து இலையிலோ அல்லது சாதாரணக் களைச்செடியிலோ கூட இருக்கும்.
  2. "போரான் இருப்பது" வேறு; "போரான் உரமாவ பயன்படுவது" வேறு: ஒரு தாவரம் மற்றொரு பயிரின் போரான் குறைபாட்டைப் போக்கும் உரமா மாற வேண்டும் என்றால், அது போரான் சத்தை அதிக அளவில் சேமித்து வைக்கும் "ஹைப்பர்-அக்குமுலேட்டராக" (Hyper-accumulator) இருக்க வேண்டும். எருக்கு இலை போரானைச் சேமித்து வைக்கும் அப்படிப்பட்ட ஒரு தாவரத்திற்கான எந்தச் சான்றுகளும் தாவரவியலில் இல்லை.
  3. செடியின் வீரியத்தையும் சத்தின் அளவையும் போட்டுக் குழப்பிக் கொள்ளுதல்: எருக்கு என்பது வறட்சியையும், உவர் மண்ணையும் தாங்கி வளரக்கூடிய ஒரு மிக வீரியமான தாவரம். பயிர்களே வளராத தரிசு நிலத்திலும் எருக்கு செழித்து வளர்வதைப் பார்த்து, "இது மண்ணின் ஆழத்திலிருந்து மற்ற செடிகளால் எடுக்க முடியாத சிறப்புத் தாதுக்களை உறிஞ்சிச் சேமிக்கிறது, அதனால் தான் போரான் இதில் இருக்கும்" என்று விவசாயிகள் தவறாகக் கணித்துவிட்டார்கள். வறட்சியைத் தாங்கி வளர்வதும், திசுக்களில் குறிப்பிட்ட சத்தைச் சேமிப்பதும் இரண்டு வெவ்வேறான தாவரவியல் குணங்கள்!

விவசாயிகளுக்கு இதனால என்ன பயன்?

நீங்கள் எருக்கு இலையை மூடாக்காகவோ, பசுந்தாள் உரமாவோ அல்லது பூச்சி விரட்டிக் கரைசல்களிலோ (ஐந்திலைக் கரைசல் போன்றவை) பயன்படுத்தி வருகிறீர்கள் என்றால், அதைத் தாராளமாகத் தொடர்ந்து செய்யுங்கள்!

மண்ணுக்குக் கரிமக் கழிவைக் கொடுப்பதிலும், பொதுவான தாதுக்களை மறுசுழற்சி செய்வதிலும், பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதிலும் எருக்கு இலைக்குச் சிறந்த அறிவியல் பூர்வமான பங்களிப்பு உள்ளது. நெல் வயல்களில் எருக்கு இலையைப் பசுந்தாள் உரமிடுவது காலம் காலமாக வெற்றி கண்ட ஒரு பாரம்பரிய முறைதான்.

ஆனால், உங்கள் நிலத்தில் போரான் குறைபாடு (Boron Deficiency) இருப்பது பரிசோதனை மூலம் உறுதியாகி, அதைச் சரிசெய்ய மட்டுமே நீங்கள் எருக்கு இலையை நம்பியிருந்தால்... அது ஆதாரமில்லாத ஒரு யூகம் மட்டுமே!

மண் பரிசோதனை மூலம் போரான் குறைபாடு உறுதி செய்யப்பட்டால், துல்லியமாக அளவிடப்பட்ட முறைகளைப் பயன்படுத்துங்கள்:

  • உடனடிப் பயிர் நிவாரணத்திற்கு: சோலுபோர் (Solubor) அல்லது போராக்ஸ் உரங்களை, ஃபல்விக் அமிலத்துடன் (Fulvic Acid) சேர்த்து தெளிக்கும் போது போரான் லாக் ஆகாமல் பயிருக்கு நேரடியாகக் கிடைக்கும்.
  • மண் வளம் பெருக்க: நன்கு மட்கிய தொழுஉரத்துடன், மண்ணில் உள்ள சத்துக்களை விடுவிக்கும் உயிரியல் பூஞ்சைகளைச் சேர்ப்பது.

தாவர பிசியாலஜி தடை: பயிர்களுக்குள் போரான் நகரும் திறன் (Boron Mobility)!

ஒருவேளை எருக்கு இலையில் சிறிதளவு போரான் சத்து இருப்பதாகவே வைத்துக்கொண்டாலும், தாவர உடலியல் (Plant Physiology) ரீதியாக நாம் ஒரு முக்கியமான பிசியாலஜி தடையைச் சந்திக்க நேரிடும்: தாவரங்களுக்குள் போரான் நகரும் திறன்!

பெரும்பாலான பயிர்களில் (நெல், காய்கறிகள், பழ மரங்கள் உட்பட), போரான் என்பது புளோயம் வழியே நகர முடியாத (Phloem-immobile) ஒரு சத்து. அதாவது, ஒரு தாவரத்தின் குறிப்பிட்ட இலைக்குள் போரான் சென்றுவிட்டால், அதைத் தாவரத்தால் புதியதாக முளைக்கும் குருத்துக்களுக்கோ அல்லது பூக்களுக்கோ மாற்றி அனுப்ப முடியாது.

  • இலைவழி தெளிப்பின் எல்லைகள் (Foliar Sprays): போரான் கலந்த ஒரு கரைசலை நீங்கள் இலை வழியே தெளிக்கும் போது, அந்த திரவம் எந்த இலையின் மீது படுகிறதோ அந்த இலைக்கு மட்டுமே அச்சத்துக் கிடைக்கும். தெளித்த சில நாட்களுக்குப் பிறகு புதிதாக உருவாகும் இளம் குருத்துகளுக்கோ, பூக்களுக்கோ அல்லது வேர்களுக்கோ இந்த சத்து கீழிருந்தோ அல்லது பக்கத்திலிருந்தோ நகர்ந்து செல்லாது.
  • மண் வழியே உறிஞ்சப்படுவதன் முக்கியத்துவம்: ஒரு பயிரின் வேர் வளர்ச்சி முதல், பூக்கள் பிடிப்பது மற்றும் காய்கள் உருவாவது வரை அதன் வாழ்நாள் முழுமைக்கும் போரான் சத்து தடையில்லாமல் கிடைக்க வேண்டும் என்றால், அச்சத்தை தாவரத்தின் வேர்கள் தான் மண்ணில் இருந்து நீரோடு சேர்த்து (Xylem பாதை வழியே) தொடர்ந்து உறிஞ்ச வேண்டும்.

இதனால்தான், எருக்கு இலை போன்ற சரிபார்க்கப்படாத இலைச்சாறுகளை மேலே தெளிப்பதால் மட்டும் மண்ணில் உள்ள போரான் குறைபாட்டை முழுமையாகச் சரிசெய்துவிட முடியாது. உங்கள் மண்ணில் போரான் சத்து இல்லை என்றால், நீங்கள் பழைய இலைகளின் மேல் எதைத்தான் தெளித்தாலும், புதிதாக வரும் குருத்துக்களும் பூக்களும் போரான் குறைபாட்டால் தொடர்ந்து பாதிக்கப்படவே செய்யும்!

இது பற்றி ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்று நினைக்கிறேன். எந்த ஊட்டச்சத்து ஒரு பயிரில் எப்படி நகரும் என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அப்பொழுது தான் ஊட்டச்சத்து பிரச்சனையை எப்படி சரி செய்யலாம் என்கிற தெளிவு கிடைக்கும். வரும் வாரத்தில் அதை நாம் பார்க்கலாம்.

மீளுருவாக்க விவசாயம் நமக்குக் கற்பிக்கும் பாடம்

இயற்கை விவசாயத்தில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயத்திற்கு இதுவே சிறந்த உதாரணம்: ஒரு தாவரத்தைப் பற்றிய பாரம்பரியப் பேச்சுக்கள், அதன் உண்மையான அறிவியல் அளவீடுகளை விட வேகமா பரவிவிடும்.

இதற்காகத் பாரம்பரிய விவசாயம் தவறானது என்று அர்த்தமல்ல—அதில் பெரும்பாலான விஷயங்கள் அறிவியலுக்கு உட்பட்டவையே. ஆனால் ஒரு விவசாயி, "எருக்கு இலை என் பயிருக்கு போரான் தருமா?" என்று கேட்டால், அதற்கு நேர்மையான அறிவியல் பதில்: "நமக்குத் தெரியாது—இதுவரை அதை யாரும் ஆய்வகத்தில் அளந்து பார்க்கவில்லை!" என்பதுதான்.


WA-007-ல் பார்த்தது போல லிபிக்-ன குறைந்தபட்ச ஊட்டச்சத்து விதியின் படி, நீங்கள் உங்கள் பயிருக்கு வேண்டிய தழை, மணி, சாம்பல் சத்துக்களை சரியான அளவு கொடுத்திருந்தாலும், போரான் தேவையான அளவில் பாதி தான் இருக்கிறது என்றால் - உங்கள் விளைச்சல் பாதியாக குறையும். இதை இன்றைய எந்த இயற்கை விவசாய புத்தகத்திலும் நீங்கள் பார்க்க முடியாது. ஆனால் இயற்கை ஒரு தெளிவான கட்டமைப்போடு தான் வேலை செய்கிறது. அதை அறிவியல் துணை கொண்டு செயல்படுத்துவது தான் மீளுருவாக்க விவசாயம்.


குறிப்பு - இதை உங்களுக்கு தெரிந்த அனைத்து விவசாயிகளுக்கும், விவசாய குழுக்களிலும் பகிரவும். மீளுருவாக்க விவசாயம் (Regenerative Agriculture) தான் நமது எதிர்காலம். சேர்ந்து பயணிப்போம். நன்றி.

எருக்கு பற்றின சில முக்கியமான ஆராய்ச்சி கட்டுரைகளை கீழ்க்கண்ட இணைய முகவரிகளில் காணலாம்:

  1. https://www.researchgate.net/publication/357198429_Evaluation_of_Nutrients_in_Leaves_and_Seeds_of_Calotropis_Procera_linn_A_Multipurpose_Plant

  2. https://www.academia.edu/7941779/Determining_the_elemental_composition_of_Calotropis_procera_using_X_ray_Analytical_Microscopy

  3. https://link.springer.com/article/10.1007/s00580-014-2051-2

இன்னும் பேசுவோம்.

ரவிசங்கர் கருப்பையா
New ViVa Bio Nutrients
www.newviva.in
934 204 9144

Share this article

Help others discover this content

Share on social media:

Article URL:

https://newviva.in/blog/does-erukku-provide-boron-to-plants-tamil

More from science-deep-dives