---
title: இந்து தமிழ் திசை கட்டுரை 4 - நிலையான விவசாயத்துக்கான திறவுகோல்
description: மீளுருவாக்க விவசாயம் - நிலையான விவசாயத்துக்கான திறவுகோல்
category: thoughts-ideas
author: ரவிசங்கர் கருப்பையா
published_at: 2026-08-17T15:00:15.041+00:00
canonical: https://newviva.in/blog/hindu-tamil-thisai-article-4
---

# இந்து தமிழ் திசை கட்டுரை 4 - நிலையான விவசாயத்துக்கான திறவுகோல்

**Published on:** 8/17/2026
**Category:** thoughts ideas
**Author:** ரவிசங்கர் கருப்பையா

---

பத்து ஆண்டுகளுக்கு முன் நல்ல மகசூல் தந்த ஒரு நிலம், இன்று அதே அளவு உரம் போட்டாலும் ஏன் அதே அளவு மகசூல் தருவதில்லை? ரசாயன உரம் மற்றும் உயிர்க்கொல்லி பயன்பாட்டால் மண் மலடாகி விட்டது.

இன்றைய இயற்கை விவசாயத்திலும் நாம் சந்திக்கும் மகசூல் வீழ்ச்சிக்கும், மண்ணைப் பற்றிய நமது அரைகுறைப் புரிதல்தான் முக்கியமான காரணம். ஒரு ஆரோக்கியமான மண் உருவாக மூன்று அறிவியல்கள் ஒன்று சேர வேண்டும்: இயற்பியல் (Physics), வேதியியல் (Chemistry), மற்றும் உயிரியல் (Biology). UN FAO அறிக்கைகளின்படி, உலகின் விவசாய நிலங்களில் மூன்றில் ஒரு பங்கு ஏற்கெனவே மிதமான அல்லது கடுமையான சீரழிவை எதிர்கொண்டுள்ளது. ஆனால், கடந்த 50 ஆண்டுகளாக நாம் செய்த பெரும் தவறு என்னவென்றால், ஏதேனும் ஒன்றை மட்டுமே கையில் பிடித்துக்கொண்டு மற்ற இரண்டையும் மறந்துவிட்டதுதான்.

1. ரசாயன விவசாயம்: 'வேதியியல்' மட்டுமே!

நவீன ரசாயன விவசாயம் முழுக்க முழுக்க வேதியியலில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. மண்ணில் pH அளவு, NPK சத்துக்கள், மின் கடத்துத்திறன் (EC), அயனிப் பரிமாற்றத் திறன் (CEC) என்பதை மட்டுமே கணக்கில் கொண்டு உரங்களைக் கொட்டுகிறது. ஆனால் மண்ணின் உடலமைப்பையும் நுண்ணுயிரிகளையும் தொடர்ந்து புறக்கணித்தால், காலப்போக்கில் மண் இறுகி (Soil Compaction), தன் உயிர்த்தன்மையை இழந்து, நீரையும் காற்றையும் உள்ளே செல்ல விடாத கடினப் பரப்பாக மாறும் அபாயம் உள்ளது.

2. இயற்கை விவசாயம்: 'உயிரியல்' மட்டுமே!

பாரம்பரிய இயற்கை விவசாயம் உயிரியலில் மட்டுமே அதிக கவனம் செலுத்துகிறது — சாணம், பஞ்சகவ்யா, அமிர்தக்கரைசல் போன்ற கரிமக் கலவைகள் மூலம் நுண்ணுயிரிகளின் செயல்பாட்டை உயர்த்துகிறது; இவற்றின் நடைமுறைப் பயன் பல விவசாயிகளால் உணரப்பட்டாலும், விஞ்ஞான ஆய்வுகள் இன்னும் தொடர்கின்றன. ஆனால் மண்ணின் இயற்பியல் அமைப்போ, கனிம வேதியியல் சமநிலையோ சரியில்லை என்றால், நுண்ணுயிரிகளால் நீண்ட காலம் அங்கு உயிர்வாழவோ தங்கள் பணியைச் செய்யவோ முடியாது.

3. மீளுருவாக்க விவசாயம்: மூன்று தூண்களின் சமநிலை!

மீளுருவாக்க விவசாயம் (Regenerative Agriculture) மண்ணை வெறும் தூசியாகப் பார்க்காமல், ஒரு "உயிருள்ள மண்" (Living Soil) ஆகக் கருதுகிறது:

1. *இயற்பியல்:* மணல்-வண்டல்-களிமண் விகிதம், காற்றோட்டம், நீர் வடிகால், சரியான மண் அமைப்பு.
2. *வேதியியல்:* தேவையான சத்துக்கள், pH சமநிலை, கனிமக் கரைசல் கட்டுப்பாடு.
3. *உயிரியல்:* ஒளிச்சேர்க்கை மூலம் வேர்கள் சுரக்கும் அமிலங்கள், பாக்டீரியா, பூஞ்சை, கரிமப் பொருட்கள்.

இந்த மூன்று தூண்களும் ஒரே நேரத்தில் செயல்படும்போது, மண் தானாகவே தன் வளத்தை மீட்டெடுக்கும் ஒரு உயிரியல் அமைப்பாக மாறுகிறது. மூடுபயிர் (Cover Cropping), குறைந்த உழவு (Minimum Tillage), பயிர்ச் சுழற்சி (Crop Rotation), கால்நடைகளை நிலத்துடன் இணைத்தல் (Livestock Integration) போன்ற எளிய நடைமுறைகள் மூலமே இவற்றை வலுப்படுத்த முடியும். பெரிய இயந்திரமோ முதலீடோ தேவையில்லை; தேவை ஒரு மனநிலை மாற்றம்தான்.

ஒரு முக்காலியின் மூன்று கால்களில் ஒரு கால் உடைந்தாலும் அது நிற்காது. அதுபோலத்தான் மண்ணும்! இயற்பியல் சரியாக இருந்தால் மட்டுமே நீர் வடிந்து காற்றோட்டம் கிடைக்கும்; வேதியியல் சமமாக இருந்தால் மட்டுமே சத்துக்கள் கிடைக்கும்; உயிரியல் உயிர்ப்புடன் இருந்தால் மட்டுமே அச்சத்துக்களை பயிர்களால் உறிஞ்ச முடியும். இவற்றில் ஒன்றை மட்டும் நம்பி நாம் செய்துவந்த விவசாயமே இன்றைய மண் சீரழிவுக்கு அடிப்படைக் காரணம்.

இன்றே உங்கள் நிலத்தின் மண்ணை பரிசோதித்துப் பாருங்கள் — எந்தத் தூணில் பலவீனமாக உள்ளது என்று அறிவதே முதல் அடி. மூன்று கூறுகளையும் சமநிலைக்குக் கொண்டுவருவோம்; நிலையான மகசூலையும் மனித ஆரோக்கியத்தையும் சாத்தியமாக்குவோம்!
